மழைநீர் கால்வாய்களை தூர்வார உத்தரவு
By திண்டுக்கல் | Published on : 27th May 2014 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தென்மேற்கு பருவ மழை தொடங்குவதை முன்னிட்டு, மழைநீர் கால்வாய்களை தூர்வாருவதற்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்குப் பருவ மழை ஜூன் மாதம் தொடங்குவதையொட்டி, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது:
திண்டுக்கல் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை கடந்தாண்டு அதிக அளவு பெய்யவில்லை. இருப்பினும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுபாட்டு பிரிவு செயல்படும். 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
நீர்நிலை மற்றும் நீர் வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்கூட்டியே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைகாலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த, போதிய அளவு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க கால்நடை மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.மனோகரன், திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.