Enable Javscript for better performance
சிறுமலை, கன்னிவாடி சரகங்களில் சோலைக்காடுகள் உருவாக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    சிறுமலை, கன்னிவாடி சரகங்களில் சோலைக்காடுகள் உருவாக்க முயற்சி

    By திண்டுக்கல்  |   Published on : 29th May 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமலை மற்றும் கன்னிவாடி வனச் சரகங்களில் சோலைக் காடுகளை உருவாக்குவதற்கான முயற்சியில், மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

      திண்டுக்கல் மாவட்டத்தில் 6.26 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அவை, சிறுமலை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, பழனி உள்ளிட்ட வனச் சரகங்களாகப் பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன.

      இதில், சிறுமலை மற்றும் கன்னிவாடி வனப் பகுதிகளில் 200 ஹெக்டேரில் சோலைக்காடுகள் அமைப்பதற்கு, வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

      சரகத்துக்கு தலா 100 ஹெக்டேர் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 35 லட்சம் செலவில் சோலைக் காடுகள் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமைந்துள்ள உயரத்தைப் பொறுத்து, சோலைக் காடுகள் 3 வகைப்படுகிறது.

      3000 மீட்டர் உயரத்தில் பேக்கட் சோலா, 2000 மீட்டர் உயரம் வரை பசுமை மாரா சோலைக் காடுகள், 1500 மீட்டர் உயரத்தில் காணப்படுவது லோ லெவல் சோலைக் காடுகள்.

      சிறுமலை மற்றும் கன்னிவாடி பகுதியில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்த சோலைக் காடுகள் அமைக்கப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக சோலைக் காடுகள் உருவாக்கப்பட உள்ளதாக, வனத்துறை அலுவலர் த. சம்பத் தெரிவித்தார்.

      மேலும் அவர் தெரிவிக்கையில், நாவல், மகிழம், செண்பகம், ஈட்டி (ரோஸ் வுட்), நீர் மருது, இலுப்பை, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

      இந்த மரங்கள் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. அதனால், சோலைக் காடுகளை விரைவாக உருவாக்க முடியாது. காடுகளை பாதுகாக்கும் வகையில், தொலைநோக்குத் திட்டமாக இதனை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

      சோலைக் காடுகள் இருக்கும் இடத்தில், விலங்குகளுக்கு தேவையான உணவுகள் அதிக அளவில் கிடைக்கும். இதனால், வனவிலங்குகள் இரை தேடி கிராமங்களுக்குள்ளும், விவசாயத் தோட்டங்களுக்கும் செல்வதைத் தடுக்க முடியும்.

    20 ஆயிரம் நீர்ப்பிடிப்பு குழிகள் 

      வனப்பகுதியில் மழைநீரை சேமிக்கும் முயற்சியாக, ஹெக்டேருக்கு 20 குழிகள் அமைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மலைச் சரிவுகளிலிருந்து கீழ்நோக்கி வடியும் மழைநீரைத் தடுத்து, பூமிக்குள் தேக்கும் வகையில் அமைக்கப்படும் ஒவ்வொரு குழியின் கீழ் பகுதியிலும், மரம் நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      இப் பணிகளோடு, தடுப்பணை, கசிவு நீர்க்குட்டை அமைத்து, களைச் செடிகளை நீக்கி, காடுகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 81 லட்சம் செலவில் மேற்கொள்வதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai