Enable Javscript for better performance
மழையுடன் விடைபெற்ற அக்னி வெயில்- Dinamani

சுடச்சுட

    

     திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்தது. அக்னி நட்சத்திரமும் விடை பெற்றது.

      அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய போது, திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அதேபோல், அக்னி நட்சத்திரம் முடியும் நாளான புதன்கிழமையும் (மே 28), மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.

      திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் புதன்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. அதேநேரத்தில், மாவட்டத்தின் எல்லையில் உள்ள பாளையம், டி.கூடலூர் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளிலும் சிறிது நேரம் மழை பெய்தது.

      குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமில்லாமல் பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், சின்னாளப்பட்டி, கொடைரோடு, செம்பட்டி, ஆத்தூர் மற்றும் சிறுமலை வனப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழையும் பெய்தது.

      திண்டுக்கல் நகரில் மாலை 6 மணி அளவில் தூறலுடன் தொடங்கிய மழை, இரவு 7 மணி முதல் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது.   கடந்த 21 நாள்களாக இடைவெளி விட்டு பெய்த மழையினால், ஓரளவு அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. அதே நேரத்தில், அக்னி நட்சத்திரம் முடிவடையும் போதும் பெய்துள்ள இந்த மழையால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      மாவட்டத்தில் நிலவி வந்த கடுமையான தண்ணீர் பிரச்னைக்கும், சமீபத்தில் பெய்த மழை தாற்காலிக தீர்வாக அமைந்தது. அதேபோல், வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் மழைநீர் தேங்கியதால், வன விலங்குகள் தண்ணீர் தேடி தோட்டங்களுக்குள் புகுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai