குடிநீர் வழங்கக் கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல்
By திண்டுக்கல் | Published on : 30th May 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேடசந்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தினால், சுமார் 30 நிமிடங்கள் ஒட்டன்சத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள நாகம்பட்டி ஊராட்சிக்குள்பட்டது குன்னம்பட்டி கிராமம். இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வறட்சியின் காரணமாக, மேட்டுப் பகுதியான குன்னம் மேல்நிலைத் தொட்டிக்கு சரியாக தண்ணீர் ஏறுவதில்லையாம். இதனால், தண்ணீர் கிடைக்காதவர்கள், அந்த வழியாகச் செல்லும் ஒட்டன்சத்திரம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் கசியும் நீரைப் பிடித்து வந்துள்ளனர்.
நாகம்பட்டி ஊராட்சியில் உள்ள நாகம்பட்டி, லவகனம்பட்டி, ஒட்டநாகம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீர், குன்னம்பட்டிக்கு மட்டும் வழங்குவதில்லை என, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக, காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் தண்ணீர் வராததை அடுத்து, குன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து, காவிரி நீர் வழங்கக் கோரி குன்னம்பட்டி மக்கள் ஒட்டன்சத்திரம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேல், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.