Enable Javscript for better performance
கொடைக்கானலில் மாநில அளவிலான கலைப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான கலைப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் சவகர் சிறுவர் மன்றம் இணைந்து கோடை காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலைப் பயிற்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. பயிற்சி முகாம் கொடைக்கானல் நாயுடுபுரம் புனித சேவியர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந் நிகழ்ச்சிக்கு கலைபண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் குமார் தலைமை வகித்தார். சவகர் சிறுவர் மன்ற உதவியாளர் லாரன்ஸ் வரவேற்றார்.

    பயிற்சி முகாமை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார். சுற்றுலா அலுவலர் குணசேகரன், கொடைக்கானல் நகரமைப்பு அலுவலர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பயிற்சி முகாமில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில்,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஒவியம், சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை 5-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். ஆசிரியர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

    பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது, கோடை காலங்களில் எங்களுக்கு கலைப் பயிற்சி அளித்து எங்களது திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும், கலை பண்பாட்டுத்துறை மற்றும் சவகர் சிறுவர் மன்றத்திற்கும் நன்றி என தெரிவித்தனர்.

    இது குறித்து கலைபண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் குமார் கூறியதாவது:

    தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் மாணவ,மாணவிகள் புதுதில்லியில் நடைபெற்றஇளந்திரு விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கான சான்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பெற உள்ளனர். மேலும் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai