Enable Javscript for better performance
சரக்கு லாரி பாதை பிரச்னை: 2700 டன் சரக்குகள் தேக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சரக்கு லாரி பாதை பிரச்னை: 2700 டன் சரக்குகள் தேக்கம்

    By திண்டுக்கல்  |   Published on : 30th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்கு லாரிகள் செல்வதற்கான பாதை பிரச்னையால், 2700 டன் சரக்குகள் ரயில் நிலைய வளாகத்திலேயே தேக்கம் அடைந்துள்ளன.

    வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. அதன்பின்னர், லாரிகள் மூலம் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு சரக்குகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    மாதத்தில் 20 நாள்கள் வரை, நாளொன்றுக்கு 200 லோடுகள், 100 லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த சரக்கு லாரிகள், ரயில்வே காலனிக்குள் செல்கின்றன. எனவே, லாரிகள் வேகமாக இயக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 6 மாத காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல், மாற்றுப் பாதை வழங்கினால், தங்களுக்கும் லாரிகளை இயக்குவதற்கு எளிமையாக இருக்கும் என லாரி ஓட்டுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக, அப் பகுதியினர் நடத்தும் மறியல் போராட்டங்களால், இருதரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில், லாரிகள் இயக்கப்படும் பாதைகளை புதன்கிழமை பார்வையிட்ட ரயில்வே அதிகாரிகள், அனுமந்தன் நகர் வழியாக மாற்றுப் பாதையில் சரக்கு லாரிகளை இயக்குவதற்கு பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

    அதன்படி, வியாழக்கிழமை அந்த வழியாக லாரிகள் இயக்கப்பட்டபோது, அப்பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சரக்குகள் எடுத்துச் செல்லும் பணி நிறுத்தப்பட்டது. இதனிடையே, மீண்டும் ரயில்வே காலனி வழியாக சரக்குகளை கொண்டு செல்ல ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு, ரயில்வே காலனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதில், வியாழக்கிழமை வந்த 3700 டன் சரக்குகளில் 2000 டன்களுக்கும் மேலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இது குறித்து, சரக்கு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஐ. ஜான்பீட்டர் தெரிவித்தது:

    கோதுமை, அரிசி மற்றும் சிமெண்ட் மூட்டைகள் வந்துள்ளன. பாதை பிரச்னைக்கு நிரந்திரத் தீர்வு கிடைத்தால் மட்டுமே, லாரி ஓட்டுநர்களுக்கும், சரக்குகளை கொண்டு வரும் உரிமையாளர்களுக்கும் நிம்மதி ஏற்படும்.

    ரயில்களிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் இறக்கப்படாத சரக்குகளுக்கு, அதன் உரிமையாளர்களிடமிருந்து ரயில்வே நிர்வாகம் கூடுதல் கட்டணம் (டெமரேஜ்)வசூலிக்கிறது.

    வியாழக்கிழமை லாரிகள் இயக்கப்படாததால், லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 370 பேர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 ஆயிரம் டன் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai