Enable Javscript for better performance
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன அறுவைச் சிகிச்சை வசதி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன அறுவைச் சிகிச்சை வசதி

    By திண்டுக்கல்,  |   Published on : 30th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சி-ஆர்ம் கருவி மூலம் நவீன அறுவைச் சிகிச்சை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    6 வயது சிறுவனுக்கு தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக, வியாழக்கிழமை காலை சி-ஆர்ம் கருவி மூலம் நவீன முறையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணபாபு. இவரது மகன் தரணிநாதன் (6). கடந்த 23 ஆம் தேதி தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தரணிநாதனின் வலது தொடை எலும்பு உடைந்தது. இதையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம், சிறுவனின் தொடை எலும்பு கம்பிகள் பொருத்தி இணைக்கப்பட்டன. சிகிச்சைக்கு பின், திண்டுக்கல் அரசு மருத்துவமனை தலைமை எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர் பி. வடிவேல் தெரிவித்தது:

    பழைய முறைப்படி எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் சதையை கிழித்து, பிளேட் மற்றும் ஸ்க்ரூ மூலம் உடைந்த எலும்புகளை இணைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இந்த முறையை பின்பற்றும்போது, எலும்பு இணைவதற்கு உதவியாக இருக்கும். உடைந்த இடத்தில் உள்ள ரத்தக் கட்டு வெளியே வந்துவிடுவது இயல்பு.

    ஆனால், இந்த நவீன சி-ஆர்ம் கருவி மூலம், 2 துளைகளின் வழியாக கம்பிகளை எலும்பின் மத்திய பகுதியில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், எலும்பு இணைவதற்கு தேவையான ரத்தக் கட்டு வெளியேறுவது தவிர்க்கப்படும்.

    சிறுவனின் தொடை எலும்பு முறிவுக்கு, மூட்டுப் பகுதியில் 2 துளைகள் அமைத்தோம். அதன் வழியாக 2 கம்பிகளை உடைந்த எலும்பின் மத்திய பகுதி வழியாக இடுப்பு வரை செருகியுள்ளோம். விலகியிருக்கும் உடைந்த எலும்புத் துண்டுகளை கணினியின் மூலம் கண்டறிந்து, நேர் செய்த பின் கம்பிகள் உள் நுழைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இந்த நவீன அறுவைச் சிகிச்சை வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

    இது குறித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ். பிரபாகர் தெரிவித்தது: கடந்த 2 மாதமாக 30 பேருக்கு சி-ஆர்ம் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த முறையிலான அறுவைச் சிகிச்சை வசதி ஏற்கெனவே உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே சி-ஆர்ம் கருவி மூலம் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

    இதுபோன்ற நவீன சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனையில் ரூ. 30 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துமனையில் அதே வசதியை இலவசமாக பெற்று பொதுமக்கள் பயனடையலாம். மேலும், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டை வைத்துள்ளவர்களும் இதுபோன்ற நவீன சிகிச்சையை இலவசமாகப் பெறலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai