Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கங்களில் இணையதளம் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ் பெறும் வசதி- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கங்களில் இணையதளம் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ் பெறும் வசதி

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச்சான்று, வருமானச்சான்று போன்ற சான்றிதழ்களை, கூட்டுறவு சங்கங்களில் இணையதளம் மூலம் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி கிராமத்தில், மின் ஆளுமைத் திட்டத்தின் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது:

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தங்கள் கிராமங்களிலேயே வருமானச்சான்று, சாதிச்சான்று, ஆதரவற்ற விதவைச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற தற்போது மின் ஆளுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் காலவிரயம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, முதல்கட்டமாக செட்டிநாயக்கன்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து வகையான சான்றிதழ்களும் பெறலாம். பொது சேவை மையமாக செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் சான்றிதழ் பெற தலா ரூ.50 சேவைக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

    உரிய அசல் ஆவணங்களுடன் மின் ஆளுமைத் திட்டத்தில், பதிவு செய்து ஒப்புதல் சான்று எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கு அளித்துள்ள விண்ணப்பம், ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை குறுஞ்செய்தி மூலமாக அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு விண்ணப்ப மனு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய சரிபார்ப்புக்கு பின் இணையதளம் மூலம் சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பித்த தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலேயே பொதுமக்கள் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர். நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் தா.செல்வக்குமரன், கூட்டுறவு அச்சகத் தலைவர் ஜெயசீலன், துணைத் தலைவர் போ.மாறன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் செல்வராஜ், அபுதாஹீர், திண்டுக்கல் கோட்டாட்சியர் ஆர்.ஜே.உத்தமன், வட்டாட்சியர்கள் சங்கரநாராயணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai