Enable Javscript for better performance
வழித்தட பிரச்னையால் 6ஆயிரம் டன் சரக்குகள் தேக்கம்: 400 பேர் வேலை இழப்பு- Dinamani

சுடச்சுட

    

    வழித்தட பிரச்னையால் 6ஆயிரம் டன் சரக்குகள் தேக்கம்: 400 பேர் வேலை இழப்பு

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழித்தடம் தொடர்பான பிரச்னையால், ரயில்வே சரக்கு நிலையத்தில் 400 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதோடு, 6 ஆயிரம் டன் சரக்குகளும் தேக்கம் அடைந்தன.

    திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு லாரிகள் வெளியேறுவதற்கான பாதை பிரச்னையால், தொடர்ந்து 2 ஆவது நாளாக சரக்குகள் எடுத்துச் செல்லும் பணி முழுமையாக பாதிப்படைந்தது.

    கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னைக்கு ரயில்வே நிர்வாகத்தின் மூலம் நிரந்தர தீர்வு காணப்படாததால், 3 ரயில்கள் மூலம் கொண்டுவரப்பட்ட சரக்குகள் உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    சரக்கு ஏற்றிய லாரிகள், ரயில்வே காலனி ஓரமாக வழக்கமான பாதையில் செல்வதற்கும், அனுமந்தநகர் வழியாக செல்வதற்கும் அந்தந்த பகுதியினர் வியாழக்கிழமை முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் வியாழக்கிழமை வெளியேற்றப்பட வேண்டிய 3700 டன் சரக்குகளில், 2000 டன்களுக்கும் மேலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல், சரக்கு லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்க கோரி ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலா 42 பெட்டிகள் கொண்ட 3 ரயில்கள் சரக்குகள் இறக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன. அவர்களுடன் திண்டுக்கல் கோட்டாட்சியர் ஆர்.ஜே.உத்தமன், டிஎஸ்பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ரயில்களிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் இறக்கப்படாத சரக்குகளுக்கு அதன் உரிமையாளர்களிடம், ரயில்வே நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. எனவே வந்துள்ள சரக்குகளை கொண்டு செல்வதற்கு முதலில் அனுமதிக்க வேண்டும். அதன்பின்னர், 2 நாள்களுக்குள் பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதை அடுத்து, மதுரை கோட்ட மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி, போராட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்களுடனும், லாரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி ரயில்வே குடியிருப்பு பகுதியையொட்டி சுற்றுச்சுவரும், காலனி நுழைவு வாயில் பகுதியில் வேகத்தடையும் அமைத்துக் கொடுக்கப்படும். தற்போது இயக்கப்படும் வழிதடத்திலேயே சரக்கு லாரிகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுச்செயலருடன் பேசிய பின் பதிலளிப்பதாக தெரிவித்தனர். எனினும் சனிக்கிழமை முதல், மீண்டும் பழைய வழிதடத்திலேயே சரக்கு லாரிகள் இயக்கப்படும் என தெரிகிறது. 2 நாள்கள் லாரிகள் இயக்கப்படாததால், ரயில் நிலையத்தில் சுமார் 6000 டன் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அரிசி மூடைகளும், தனியார் ஆலைக்கு வந்த கோதுமை மூடை மற்றும் சிமெண்ட் மூடைகளும் உள்ளன. அதேபோல் 2 நாள்கள் நடைபெற்ற போராட்டத்தினால், லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர் என மொத்தம் 400 பேர் வேலையின்றி இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai