Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்தது- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்தது

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைத் தொழிலாளியாக இருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்ததாக, ஐஆர்எஸ் அதிகாரியான திருச்சி மண்டல வருமான வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார் தெரிவித்தார்.

       திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியின் 47-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் வி. ஆதிநாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, முதல்வர் நா. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார்.

      இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி மண்டல வருமான வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார், இளங்கலை மற்றும் முதுகலைப் பிரிவைச் சேர்ந்த 691 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:

       ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் கல்வி இன்றியமையாதது. கற்றலில் குறைபாடு காரணமாக 6 ஆம் வகுப்புடன் எனது பள்ளிக் கல்வி முடிவுக்கு வந்தது.

    குழந்தைத் தொழிலாளிகளில் ஒருவனாக, வாழ்வைத் தொடங்கிய எனக்கு கற்றலின் முக்கியத்துவம் புரிந்தது.

      கூலி வேலை செய்த நிலையிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை தனித்தேர்வராக எழுதினேன்.

    பள்ளிகள் மூலம் தேர்வு எழுதவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, 12 தனியார் கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியாக, அரசு கல்லூரியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் கல்வி கற்றதால், பல்கலைக்கழக அளவிலான தரம் எனக்குக் கிடைத்தது.

      தேசிய அளவில் 6 லட்சம் பேர் எழுதிய இந்தியக் குடிமைப் பணித் தேர்வில், நான் முதலிடம் பெற்றேன். ராணுவம், கூட்டுறவு இணைப் பதிவாளர், ஐபிஎஸ் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன்.

    2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சகத்தில் செயலராகப் பணியாற்றியபோது, நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கான உரை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

       குழந்தைத் தொழிலாளியாக மாறிய எனக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால், பல துறைகளிலும் சிறந்த அறிவாற்றலை கொண்டுள்ள இளைஞர்கள் கூடுதலாக சாதிக்கமுடியும் என்றார் அவர்.  

      நிகழ்ச்சியில், ஜிடிஎன் கல்லூரி முதன்மைச் செயல் அலுவலர் க. ரெத்தினம், தனி அலுவலர் இரா. ஆறுமுகம், துணை முதல்வர் என். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai