கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பதை தடுப்பதற்கான வழிமுறைகள்
By திண்டுக்கல் | Published On : 04th April 2016 05:10 AM | Last Updated : 04th April 2016 05:10 AM | அ+அ அ- |

கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கோடைகாலத்தில் ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால் கால்நடைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு முறை போன்றவற்றால் கறவை மாடுகளில், பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வறட்சியால் ஏற்படும் பசுந்தீவன குறைபாடு, பால் உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கோடைகாலத்தில் ஈக்களின் பெருக்கம் அதிகமாகி, அவை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே உட்கார்ந்து தொல்லை கொடுப்பதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற சூழ்நிலையில் இருக்கும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்து தெளிக்கலாம். மேலும், மாட்டுத் தொழு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, எருக்குழியில் மருந்து தெளிப்பதன் மூலம் ஈக்களின் உற்பத்தி இருக்காது.
உயர் இன கால்நடைகள் 80 டிகிரி பாரன்ஹீட், இந்திய இனங்கள் 95 டிகிரி, கலப்பின கறவை மாடுகள் 85-90 டிகிரி வெப்ப நிலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பசுந்தீவனம் தவறாமல் கொடுக்கும் போது, பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.
காய்ந்த புல் மற்றும் குழிப்புல் ஆகியவற்றோடு, அடர் தீவனங்களையும் கறவை மாடுகளின் உணவில் சேர்க்க வேண்டும். அதே போல் 4 அல்லது 5 முறை குடிநீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகள் தண்ணீர் தேவையை 3-ல் 2 பங்கினை பகல் நேரங்களில் மட்டுமே பூர்த்தி செய்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு, ஒவ்வொரு மாட்டுக்கும் மூன்றிலிருந்து 3.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கறவை மாடுகளின் தண்ணீர் தேவையை முறையாக கண்காணிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என தெரிவித்துள்ளார்.