Enable Javscript for better performance
ஆய்வுப் பணிகளை தவிர்த்த 5 குழுக்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் போலி மருத்துவர்களின் செயல்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வுப் பணிகளை தவிர்த்த 5 குழுக்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் போலி மருத்துவர்களின் செயல்பாடு!

    By DIN  |   Published on : 29th December 2016 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட 9 குழுக்களில் 5 குழுவினர் ஆய்வுப் பணிகளை புறக்கணித்தனர். இதனால் மீண்டும் போலி மருத்துவர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
     திண்டுக்கல் மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
      மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 110-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் செயல்படுவதாக ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு 9 குழுக்கள் அமைக்கப்பட்டன.
     அதன்படி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஜெகவீரபாண்டியன் (திண்டுக்கல்), வரதராஜன் (பழனி), திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவர் எஸ்.பிரபாகர், காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ராமசந்திரன், நிலக்கோட்டை மருத்துவ அலுவலர் பூங்கோதை, திண்டுக்கல் மாநகர நல அலுவலர் மோ.அனிதா உள்பட 9 பேர் தலைமையில், 9 வட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம் 9 குழுக்கள் அமைக்கப்பட்டன.
     இந்த 9 குழுக்களும் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தி போலி மருத்துவர்களை பிடிக்க வேண்டும் என ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. 9 வட்டங்களில் செயல்பட்டு வரும் போலி மருத்துவர்களின் பெயர் பட்டியலும், விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கடந்த 23 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தும்படி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி பிரகாஷ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நியமிக்கப்பட்ட 9 குழுக்களில், 4 குழுவினர் மட்டுமே ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார துணை இயக்குநர்கள் உள்ளிட்ட 5 பேர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. மேலும், திடீர் ஆய்வு குறித்து ஏற்கனவே தகவல் வெளியானதால் ஆய்வுக்கு சென்ற இடங்களிலும் 3 பேரைத் தவிர, மற்ற போலி மருத்துவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
     மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், 5 அதிகாரிகள் தலைமையிலான குழு ஆய்வுக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர். இதனால் ஊக்கம் பெற்ற போலி மருத்துவர்கள், மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. பனி மற்றும் திடீர் மழையினால் ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் போலி மருத்துவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக ஊரகப் பகுதியிலேயே போலி மருத்துவர்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
     இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:
     போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதன் தொடர் நடவடிக்கையாக நீதிமன்ற விசராணைக்குச் செல்ல வேண்டும். இதனைத் தவிர்க்கவே, போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஊரகப் பகுதியில் உள்ள மருந்தகங்கள், சிகிச்சை அளிக்கும் இடமாகவும் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மருந்து ஆய்வாளர் மூலமே விசாரணை நடத்த முடியும். மேலும், மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஆய்வு செய்வதற்கு பதிலாக, ஒவ்வொரு வட்டமாக திடீர் ஆய்வு மேற்கொண்டால் போலி மருத்துவர்களை எளிதாக பிடிக்க முடியும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai