Enable Javscript for better performance
ஆத்தூர் அணை விரிவாக்கப் பணிகள்: விவசாயிகளுடன் ஆட்சியர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் அணை விரிவாக்கப் பணிகள்: விவசாயிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

    By DIN  |   Published on : 15th October 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் அணைப் பகுதியில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் சென்று அணைப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
     திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த் தேக்கத்தில், திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் கூடுதல் நீர்த் தேக்க ரூ. 20 கோடி செலவில் நீர்பிடிப்பு பகுதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அனுந்தராயன்கோட்டை, ஆத்தூர், ஆவரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது. மேலும், அணை விரிவாக்கம் செய்யும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
     இந்நிலையில், ஆத்தூர் அணையில் கூடுதலாக நீர்த்தேக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஆட்சியரை சந்தித்து தங்களுக்கான நீராதாரம் பாதிக்கப்படும் என்று கூறினர். அப்போது ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையர் ந.மனோகர் உள்ளிட்ட அதிகாரிகள், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக நிறைவேற்றப்படும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
     ஆனால், பல தலைமுறைகளாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தண்ணீரை தடுத்தால், நன்செய் நிலங்களின் சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பாசன குளங்களுக்கு தண்ணீர் வழங்கிய பின்னரே, விரிவாக்கம் செய்யப்படும் அணையில் தண்ணீர் தேக்கும் வகையில் ஷட்டர்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக அக். 20 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  
     ஆய்வின் போது திண்டுக்கல் மாநகராட்சி செயற்பொறியாளர் சி.கணேசன், நகர் நல அலுவலர் மோ.அனிதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரே.தமிழ்செல்வன், வட்டாட்சியர் சிவசங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai