Enable Javscript for better performance
கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள ஆதிவாசிகள் வாழ்ந்த குகைகளை பாதுகாக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள ஆதிவாசிகள் வாழ்ந்த குகைகளை பாதுகாக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள ஆதிவாசிகள் வாழ்ந்த குகைகள், வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     பழனி- கொடைக்கானல் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, மூங்கில் பள்ளம், தாண்டிக்குடி, கடுகுதடி, வடகரைப்பாறை, கௌரவநாச்சி ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசிகள் குகைகள் மற்றும் கற்குகைகளில் வாழ்ந்துள்ளனர்.
     காலப் போக்கில் இவர்கள் அவ்விடங்களை விட்டு கிராமப் பகுதிகளில் குடியேறினர். வனப் பகுதிகளை விட்டு வெளியேறியதும் அவர்கள் வசித்த கற்குகைகள் தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் கொடைக்கானல் பேத்துப்பாறை, தாண்டிக்குடி, மூலையார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கற்குகைகளும் சேதமடைந்து காட்சியளிக்கின்றன. எனவே ஆதிவாசிகள் வாழ்ந்த இடம், அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை சுற்றுலாத் துறையினரும், தொல்பொருள் ஆய்வாளர்களும் சேகரித்து கண்காட்சி அமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஆதிவாசி மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் எங்களது முன்னோர்கள் வாழ்ந்த வனப் பகுதியிலுள்ள இடங்களுக்குச் சென்று குல தெய்வங்களான தொட்டிச்சியம்மன், பலியநாச்சி அம்மன், வன தேவதை ஆகிய தெய்வங்களுக்கு படையலிட்டு பாரம்பரிய முறைப்படி ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வருகிறோம். தற்போது அங்கு எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கற்குகைகள் சேதமடைந்திருப்பது வருத்தமளிக்கிறது. எனவே அவற்றை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கொடைக்கானல் சுற்றுலாத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியிலுள்ள ஸ்ரீபாலமுருகன் கோயில் செல்லும் சாலைப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதுடன் அப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் வாழ்ந்த கற்குகைகளை சீரமைப்பது குறித்து சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 1 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai