Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை: கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை: கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் மரம் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியில் அதிகாலை மரம் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத் துறையினர் சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வில்பட்டி பகுதியில் மின் கம்பங்களும், ஏரிச்சாலைப் பகுதியில் மரமும் சாய்ந்து விழுந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இந்த இடங்களுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் சென்று அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும், வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததில் நிலக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 118 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 24.64, கொடைக்கானல்- 70, நத்தம்- 41, நிலக்கோட்டை- 118, பழனி- 70, வேடசந்தூர்- 6.28, சத்திரப்பட்டி- 32, வேடசந்தூர் புகையிலை மையம்- 7.60, கொடைக்கானல் போட் கிளப்- 75.50, காமாட்சிபுரம்- 20.50, மொத்தம்- 465.52.
     கடந்த சில மாதங்களாக மழையில்லாமல் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள், இம்மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வத்தலகுண்டு: இந்நிலையில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து வத்தலகுண்டுவில் உள்ள மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    இதில், வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் இரவு முழுவதும் மின் விநியோகம் இல்லாமல் இருளில் மூழ்கியது. இதே போல் சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai