திண்டுக்கல் மாநகராட்சியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடக்கம்: ரூ.1.10 கோடி வீண்

திண்டுக்கல்லில் காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக  மாநகராட்சி சார்பில் ரூ.1.10 கோடி செலவில் தொடங்கப்பட்ட திட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக  மாநகராட்சி சார்பில் ரூ.1.10 கோடி செலவில் தொடங்கப்பட்ட திட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
 திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள நீரேற்று நிலையம் 24 மணி நேரமும் செயல்பட 1 மணி நேரத்துக்கு 30 யூனிட் மின்சாரம் தேவை. அதற்காக  காய்கறி கழிவுகள் மூலம் மின்சார தயாரித்து நீரேற்று நிலையத்துக்கு பயன்படுத்தும் வகையில் ரூ.1.10 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டது.
மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள் மூலம் நாளொன்றுக்கு 325 முதல் 350 கன மீட்டர் இயற்கை எரிவாயு தயாரித்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
 இதில், நாளொன்றுக்கு 5 டன் காய்கறிக் கழிவுகளை பயன்படுத்தி 90 யூனிட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2013-14 இல் திட்டப் பணிகள் முடிவடைந்து பல மாதங்களாக செயல்படாமல் இருந்தது. கடந்த மே 3 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் 2 நாள்கள் மட்டுமே செயல்பட்டது. அதன் பின்னர், கடந்த 30 நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் ரூ. 1.10 கோடி அரசு பணம் வீணாகியுள்ளது. நீரேற்று நிலையத்துக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை.
 தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் திடக்கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் பல தொழில்நுட்ப மாறுதல் மற்றும் மேம்பாடுகளுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், 10 நாள்கள் கூட தொடர்ந்து செயல்படாமல் முடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 இதில், காய்கறி கழிவுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இறைச்சிக் கழிவுகளை வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தலாம் என்றும், பழக் கழிவுகளை பயன்படுத்தவே கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காய்கறிக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் தனியாகப் பிரித்து வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், எரிவாயு தயாரிக்கும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ந. மனோகரன் கூறியது: இயந்திரக் கோளாறு காரணமாக காய்கறி கழிவுகளை அரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். விரைவில் பழுது நீக்கம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com