மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் நத்தம், வேடசந்தூர், எரியோடு, திண்டுக்கல், வத்தலகுண்டு உள்ளிட்ட பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு நகரச் செயலர் ராஜப்பா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்ளிட்ட 80 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். நத்தம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். இதே போல், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் நகர, ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட கொடைக்கானல் நகரச் செயலர் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
வத்தலகுண்டு: வத்தலகுண்டுவில் திமுக ஒன்றியச் செயலர் கே.பி.முருகன் தலைமையில் காளியம்மன் கோயில் முன்பும், அதனையடுத்து, பேருந்து நிலையம் முன்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக நகர செயலர்கள் கே.சின்னத்துரை (வத்தலகுண்டு), தங்கராசு (சேவுகம்பட்டி) உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பழனி: பழனி பேருந்து நிலையம் முன் திமுக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி. வெங்கட்ராமன் தலைமையிலான போலீஸார் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அதே போல் பழனியை அடுத்த தொப்பம்பட்டியிலும் சாலை மறியலுக்கு முயன்ற 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.