கொடைக்கானல் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் பெருமாள்மலை, மன்னவனூர், மாட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேல்மலைக் கிராமங்களுக்கும் சேர்த்து, அரசு மருத்துவமனை கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலை மற்றும் அவசரச் சிகிச்சை பெறும் நோயாளிகள் தேனி, மதுரை, திண்டுக்கல் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால், மலைக் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும், அங்கு செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு கூட சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முள்புதர்கள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுவதுடன், சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய செவிலியர்களை நியமித்து, தேவையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். செவிலியர்கள் பற்றாக்குறையால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே செயல்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.