வேடசந்தூர் அருகே கண்மாயில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி ஆணையை, விவசாயிகளிடம் ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள 197 பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் 1,557 ஊராட்சி குளங்களிலிருந்து விவசாயத் தேவைக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் 1,200 குளங்களுக்கான அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேடசந்தூர் அடுத்துள்ள மாரம்பாடி கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியினை முதல் கட்டமாக 42 விவசாயிகளுக்கு, ஆட்சியர் வினய் வழங்கி தெரிவித்ததாவது: 26 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், இந்த கண்மாய் மூலம் பாசன வசதிப் பெற்று வந்த 260 ஹெக்டேர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வண்டல் மண் கிடைக்கும் பகுதியை பொதுப்பணித்துறையினர் மூலம் அளவீடு செய்து, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதோடு, குளமும் தூர்வாரப்படும். விவசாயிகளுக்கு சொந்தமான 27 டிராக்டர்கள் மூலம் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு விவசாயிக்கு 30 லோடு மண் எடுத்துக் கொள்வதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீடித்த நிலையான விவசாயம் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றார்.
அதனைத் தொடர்ந்து குளத்திலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் பரப்பும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். வண்டல் மண் கொட்டுவதற்கு முன்பும், அதன் பின்னரும் மண் பரிசோதனை மேற்கொள்ளவும் வேளாண்மைத் துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குநர் மு.தங்கச்சாமி, துணை இயக்குர்(அட்மா) பெ.பாஸ்கரன், வட்டாட்சியர் தசரதன், உதவி செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.