பழனியில் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கான மேம்பட்ட பயிற்சிப் பட்டறையில், வித்வான்கள் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்புப் பயிற்சிகளை வழங்கினர்.
பழனி திருக்கோயில் தவில், நாதஸ்வர வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கான மேம்பட்ட பயிற்சிப் பட்டறை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி நிறைவில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கலைஞர்களுக்கு சான்றிதழ், ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பயிற்சிப் பட்டறையில் பயிலும் கலைஞர்களுக்கு கடந்த நாள்களில் பிரபல வித்வான்களான வலையப்பட்டி சுப்ரமணியன், சிக்கல் உமாபதி, இஞ்சிக்குடி கணேசன், முருகையன் உள்ளிட்டோர் சிறப்புப் பயிற்சிகள் வழங்கினர். அதேபோல், செவ்வாய்க்கிழமை மன்னார்குடி சங்கரநாராயணன் (நாதஸ்வரம்), வெள்ளியங்கோட்டம் பழனிவேல் (தவில்) உள்ளிட்டோர், கோயில் விழாக்கள், கால பூஜைகள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் வாசிக்க வேண்டிய ராகம் குறித்து கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேலும், கலைஞர்களின் சந்தேகங்களுக்கு வித்வான்கள் பதிலும் அளித்தனர்.
நிகழ்ச்சியில், பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை வகித்து சிறப்புரை நிகழ்த்தினார். துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா முன்னிலை வகித்தார். இதில், ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.