திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன்கோட்டையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை 35 பயணிகளுடன் சிற்றுந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (25) சிற்றுந்தை ஓட்டி வந்தார்.
கொட்டப்பட்டி கண்மாய் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே, இ.மார்க்ராஜா (19) உயிரிழந்தார். திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னிமாந்துரை புதுப்பட்டியைச் சேர்ந்த இவர், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
விபத்தில் காயமடைந்த அபிநயா (13), பிரகாஷ் (16), சுவேதா (17), பிரியதர்ஷினி (17), ஜெயந்தி (20) உள்ளிட்ட 17 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.