Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் சட்டப் பேரவைக் குழுவினர் ஆய்வு: வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்த தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் சட்டப் பேரவைக் குழுவினர் ஆய்வு: வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் மலைப் பகுதியில் வன உயிரினங்களால் மனித உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டது.
     தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழுவின் தலைவர் சு.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துறை ரீதியான அலுவலர்கள் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டத்திற்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். 
     கூட்டத்தின்போது, கடந்த 2009-11ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட 20 மனுக்கள் மற்றும் 2012-13
    ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட 28 மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
     அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.செந்தில்குமார் பேசுகையில், பழனி தொகுதிக்குள்பட்ட தாண்டிக்குடி, மன்னவனூர், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகளால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், யானை தாக்கியதில், கூலித் தொழிலாளர்களின் உயிரிழப்புக்ளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு நிரந்த தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக இதே கோரிக்கையை, தாண்டிக்குடி பகுதி விவசாயிகளும் தெரிவித்திருந்தனர்.
     கூட்டத்தில் பங்கேற்ற நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
     அதற்கு பதில் அளித்த பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் ராஜேந்திரன், இதுதொடர்பாக அளிக்கப்படும் கோரிக்கை மனுவினை அரசுக்கு உடனடியாக பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். மேலும், அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் கட்டட வசதி குறித்தும், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்துவதற்கும் மனு அளித்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார். 
     கூட்டத்தில் பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் சி.சந்திரசேகரன், அ.ராமு, அ.மனோகரன், சபா.ராசேந்திரன், சு.புகழேந்தி, பி.என்.பி.இன்பசேகரன், எ.எல்.எஸ்.லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
     முன்னதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 
        அப்போது ஆட்சியர் டி.ஜி.வினய், நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ், துணை இயக்குநர் (காசநோய்) ராமச்சந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai