Enable Javscript for better performance
நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்பு: தென்னை மரங்களை வெட்டிய வழக்கு:  திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜ- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்பு: தென்னை மரங்களை வெட்டிய வழக்கு:  திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு  

    By DIN  |   Published on : 09th February 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன் தென்னை மரங்களை வெட்டியது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    திண்டுக்கல் நீலமலைக்கோட்டையைச் சேர்ந்தவர் கே.முருகேசன். இவருக்கு சொந்தமான 4.12 ஏக்கர் நிலத்தின் அருகில் உள்ள கால்வாய் கரையில் 50 தென்னை மரங்கள் இருந்தன. இவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தென்னை மரங்களை அகற்றக்கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். 
    இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன்,  ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னை மரங்களை வெட்ட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் வருவாய்த் துறையினர் தென்னை மரங்களை வெட்டியதாக மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட்டும்,  வெட்டியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணா, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திண்டுக்கல் ஆட்சியர்  ஆஜராகியிருந்தார். விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
    இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு  வழக்குரைஞர், நீர்வழிப்பாதையின் மையப்பகுதியில் மரங்கள் இருந்ததால் வெட்டியதாகத் தெரிவித்தார். இதில் குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியிருந்தாலும், நீதிமன்றத்தின் கவனத்துக்கு அதை கொண்டு வந்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.  மேலும் பெரும்பாலான அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. அரசு ஊழியர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்ற நீதிபதிகள்,  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்,  அப்பகுதி வட்டாட்சியர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai