திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

திண்டுக்கல் மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் எல்லை

திண்டுக்கல் மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் எல்லை விரிவாக்கத்திற்கு, சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ஒப்புதல் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 14 சதுர கி.மீட்டர் பரப்பில் அமைந்துள்ள திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில், சுமார் 2.19 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டதையடுத்து, எல்லை விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள 10 ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகருடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் திண்டுக்கல் நகரின் பரப்பளவை 110 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் தரப்பிலோ, பொதுமக்கள் தரப்பிலோ பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லாத நிலையிலும், மாநகராட்சி விரிவாக்க திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 இதனால், திண்டுக்கல் நகர மக்களின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைக்கப்பட வேண்டிய புறநகர் பேருந்து நிலைய திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதே போல் காந்தியடிகளின் நினைவாக பாதுகாக்கப்பட வேண்டிய காந்தி மைதானம், தினசரி காய்கறி சந்தையாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
 மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்,  பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளிலேயே அமைந்துள்ளன. பொலிவுறு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் திண்டுக்கல்லை இணைப்பதற்கான சூழ்நிலை உருவானால், சுற்றுப்புற பகுதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது அதற்கான வாய்ப்பு கிடைத்தும், அதிகாரிகள் அதனை தவற விட்டுவிட்டனர்.  இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் மாவட்ட ஆட்சியர்கள்  மாநாட்டில், திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பான கோரிக்கையை ஆட்சியர் டி.ஜி.வினய் வலியுறுத்த வேண்டும் என்பதே திண்டுக்கல் நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பேராசிரியர் மு.சரவணன் கூறியதாவது: இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் திண்டுக்கல் வெங்காய சந்தை மற்றும்  கடலை சந்தை பெரிய அளவில் வளர்ச்சிப் பெறவில்லை.  மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால், நகர மேம்பாடு மட்டுமின்றி தொழில் வளர்ச்சியின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்பு ஏற்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதிகள் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்டதாக இருப்பதால், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 110 சதுர கி.மீட்டராக திண்டுக்கல் மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதில்,  திண்டுக்கல் நகரோடு தற்போது ஒன்றாக இருக்கும் சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, அடியனூத்து ஆகிய 5 ஊராட்சிகளை முதல் கட்டமாக இணைத்து 84 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யலாம். அதன் மூலம் மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 1 லட்சம் வரை அதிகரிக்கும்.
 அப்போது புறநகர் பேருந்து நிலையம், காய்கறி சந்தை, பூச்சந்தை ஆகியவற்றை எளிதாக உருவாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். புறநகர் பேருந்து நிலையத்துக்கான நிலம்  ஊராட்சிகள் வசம் உள்ளன. 
இதனால், அத்திட்டம் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்படும் போது, உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்த முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com