Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து பேச முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குறைதீர் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து பேச முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறைதீர் கூட்டத்தின்போது தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து விளக்கம் அளிப்பதை தவிர்த்து, பிரச்னைகள் தொடர்பாக பேசுவதற்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
    திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வீ.மனோகரன் முன்னிலை வகித்தார்.
    கூட்டம் தொடங்கியதும், வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க தொடங்கினர். அப்போது குறுக்கிட்டு பேசிய ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயி செல்லப்பா, தொழில்நுட்பங்கள் குறித்து கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து விளக்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
    அதேநேரத்தில், எரியோடு அடுத்த வடுகம்பாடியைச் சேர்ந்த விவசாயி ரங்கமணி, கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி கேட்டுச் செல்லும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார். அதன் பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், தண்ணீரே இல்லாத நேரத்தில் நீர்மேலாண்மை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டாம். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    மரக்கன்று உற்பத்திக்கு 1 ஏக்கர் தானம்: நீலமலைக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ப.குப்புசுவாமி, தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மரக்கன்று உற்பத்தி செய்வதற்காக தானம் வழங்குவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலமலைக்கோட்டை கிராமத்தில் சோத்தாள நாயக்கர் அணை மற்றும் நீரோடைகளிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த இடங்களை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கரையோரங்களில் மரக் கன்றுகள் நடவு செய்ய வேண்டும். அதற்கான நாற்றங்கால் தயாரிக்க எனது நிலத்தை கொடுக்க முன்வந்துள்ளேன் என்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai