Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில்ஐஎஸ்ஐ தரச்சான்றில்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு 'சீல்'- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில்ஐஎஸ்ஐ தரச்சான்றில்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு 'சீல்'

    By DIN  |   Published on : 24th March 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஐஎஸ்ஐ தரச்சான்றில்லாமல் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை மூடி 'சீல்' வைக்க உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இம்மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்பாக நுகர்வோர் சார்பில் பல்வேறு புகார்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், முழுமையாக சுத்திகரிக்கப்படாத தண்ணீர் விநியோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் கே.நடராஜன், இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் (ஐஎஸ்ஐ) உரிமம் பெறாமல் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மாவட்டம் முழுவதும் சுமார் 100 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு தரமில்லாத நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்பான முதல் கட்ட ஆய்வில், ஐஎஸ்ஐ தரச் சான்றுடன் மாவட்டம் முழுவதும் 32 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
    மேலும், ஐஎஸ்ஐ சான்றில்லாமல் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், அதில் 15 நிறுவனங்கள் திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கே.நடராஜன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எஸ்.செல்வம், ஏ.எஸ்.சரண்யா, எம்.பாண்டியராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனங்களிடம் தண்ணீர் பெற்று விற்பனை செய்யும் லாரிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். முதல் கட்டமாக இந்த வகையிலான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பின்னர், நிறுவனத்திற்கு சீல் வைப்பதுடன், லாரிகளும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai