Enable Javscript for better performance
20 ஆண்டுகளுக்குப் பிறகு நத்தத்தில் ஏலம்: பேரூராட்சி வருவாய் ரூ.27 லட்சமாக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    20 ஆண்டுகளுக்குப் பிறகு நத்தத்தில் ஏலம்: பேரூராட்சி வருவாய் ரூ.27 லட்சமாக உயர்வு

    By DIN  |   Published on : 24th March 2018 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர், நத்தம் பேரூராட்சியில் முறையாக நடைபெற்ற பொது ஏலத்தால், ரூ.6 லட்சமாக இருந்த வருமானம் ரூ.27 லட்சத்துக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சிக்கு உள்பட்ட வார சந்தை, சாலையோர கடைகள், பொதுக் கழிப்பிடம், ஆடுவதை கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பொது ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏலம் எடுத்தவர்களே, மீண்டும் புதுப்பித்துக் கொண்டு ஏலம் விடுவதை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    இந்நிலையில், நத்தம் பேரூராட்சி ஏலம், செயல் அலுவலர் கணேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த பரபரப்புக்கு இடையே நடைபெற்ற ஏலத்தில், ஒவ்வொரு இடத்திற்கும் தொடக்கம் முதலே கடும் போட்டி ஏற்பட்டது.
    வார சந்தை, சாலையோர கடைகள், பொதுக் கழிப்பிடம், ஆடுவதை கூடம் உள்ளிட்ட பகுதிகள் மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
    தற்போது புதுப்பித்தல் முறையை ரத்து செய்துவிட்டு, பொது ஏலம் அறிவிக்கப்பட்டதால், பேரூராட்சியின் வருமானம் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.27 லட்சத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வார சந்தை மற்றும் சாலையோர கடைகள் ஏலம் எடுப்பதற்கு பலத்த போட்டி ஏற்பட்டது. கடந்த முறை ரூ.3 லட்சத்திற்கு வழங்கப்பட்ட வார சந்தை தற்போது ரூ.13,93,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
    மேலும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சமாக ஏலத் தொகை உயர்ந்துள்ளது. அதேபோல் சாலையோர கடைகளுக்கு ரூ.2.08 லட்சம் மட்டும் கிடைத்து வந்த நிலையில், தற்போது ரூ.8.31 லட்சத்திற்கு ஏலம் போனது.
    பேரூராட்சிக்கான வருமானம் 4 மடங்கு உயர்ந்துள்ளதால், மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai