நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவர்கள் அலைக்கழிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, திண்டுக்கல் மற்றும் நத்தத்தில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவர்கள்


நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, திண்டுக்கல் மற்றும் நத்தத்தில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் 414 மையங்களில் சனிக்கிழமை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டிருந்தன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், 16 மையங்களில் தலா 70 மாணவர்கள் வீதம் மொத்தம் 1,108 மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், முதல் நாள் பயிற்சி வகுப்பில் ஒட்டன்சத்திரம் மையத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதற்கு அடுத்தப்படியாக கொடைக்கானல் மையத்தில் 45 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆத்தூர், எரியோடு, குஜிலியம்பாறை, செந்துறை மையங்களில் 20க்கும் கூடுதலான மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், திண்டுக்கல் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 8 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்தாலும், நண்பகல் 12 மணி வரை பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. காலை 9.30 மணி முதல் காத்திருந்த மாணவர்கள் மதியம் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயிற்சி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வகுப்புகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களை திரும்ப அழைத்து வந்து பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
நத்தத்தில் பயிற்சி நடைபெறவில்லை: நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நீட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதிக மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி மாதிரிப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான மையமாக தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த பள்ளி சனிக்கிழமை திறக்கப்படவில்லை. இதனால், நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவர்கள் அதிருப்தியில் திரும்பிச் சென்றனர். கன்னிவாடி, கோபால்பட்டி, வத்தலகுண்டு, அய்யம்பாளையம், வேடசந்தூர், பழனி, திண்டுக்கல் மையங்களில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே முதல் நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது: நத்தம் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் உடல்நிலை சரியில்லை என தகவல் கொடுத்துள்ளார். பள்ளியின் சாவி அவரிடம் இருந்ததால், பயிற்சி வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
உரிய தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்த தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் வகுப்புகள் நடைபெறாதது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com