ஓய்வூதியர்களுக்கான மருத்துவ நல நிதி: குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.3.5 லட்சம் கூடுதலாக பெறலாம்: முதன்மை செயலர் தகவல்

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ நல நிதி ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நோய்

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ நல நிதி ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நோய் பாதிப்புகளுக்கு கூடுதலாக ரூ.3.5 லட்சம் செலவில் சிகிச்சைப் பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசின் முதன்மை செயலரும், கருவூலக் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
     தமிழ்நாடு மாநிலப் பணி நிறைவு குடிமைப் பணி அதிகாரிகள் சங்கத்தின் 8ஆம் ஆண்டு மாநிலப் பேரவைக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து தென்காசி சு.ஜவஹர் பேசியாதவது:
     80 வயது நிறைவடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியத்துக்கு வயது சான்றுக்கான ஆவணமாக ஆதார் அட்டையை  பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பெற்று வரும் மருத்துவ நல நிதி 2018 ஜூலை முதல் 4 ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ. 3.50 லட்சம் வரை கூடுதலாக மருத்துவ சிகிச்சைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.      
        பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த 79ஆயிரம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தற்போது கருவூலம் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. வாழ்நாள் நிலுவை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்குவதற்கான நிதி அதிகார உச்ச வரம்பு கருவூல அலுவலருக்கு ரூ. 5 லட்சமாகவும், கருவூலக் கணக்குத் துறை ஆணையருக்கு ரூ.10 லட்சமாகவும், அதற்கு கூடுதலான தொகைக்கு அரசிடமிருந்து அனுமதி பெற்று வழங்கவும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
 கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர் மூ.தவசுக்கனி, திண்டுக்கல் மாவட்ட கருவூல அலுவலர் சரவணன் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com