திண்டுக்கல் அருகே 400 ஆண்டுகள் பழமையான கோயிலை புனரமைக்க உதவும் வேட்பாளருக்கு ஆதரவு: கிராம மக்கள் முடிவு
By DIN | Published On : 01st April 2019 02:31 AM | Last Updated : 01st April 2019 02:31 AM | அ+அ அ- |

குஜிலியம்பாறை அருகே திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள தீண்டாக்கல் பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோயிலில் விநாயகர், முருகன், சாமுண்டீஸ்வரி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் கருப்பண சுவாமி கோயிலும் உள்ளது.
பழமையான இக்கோயில் முறையான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளது. மேலும், கோயிலுக்குச் செல்வதற்கு படிக்கட்டு வசதியும் இல்லை. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததோடு, கடந்த சில ஆண்டுகளாக பூஜைகள் நடத்துவதும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், தற்போது இக்கோயிலுக்கு யாரும் செல்வதில்லை.
இந்நிலையில், இக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று திரண்ட தீண்டாக்கல் கிராம மக்கள் மற்றும் கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சமூக தன்னார்வ நண்பர்கள், இக்கோயிலை புனரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர், சமூக தன்னார்வ நண்பர்கள் அமைப்பினர் கூறியது: பராமரிப்பு இல்லாத காரணத்தால், வீரபாண்டீஸ்வரர் கோயில் கடந்த 3 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது. பழமையானது என்பதை விட, இப் பகுதியின் வரலாற்றுச் சின்னமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இந்த கோயிலை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே இந்த பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாக்கு கிடைக்கும் எனத் தெரிவித்தனர்.