தமிழ்ப் புத்தாண்டு: பழனி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை  வீடான பழனியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடிகளுடன் திரண்டனர்.  
மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன.  
மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் சன்னிதி முன்பாக யாகபூஜை நடத்தப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது. பழனி திருமுருக பக்தசபா சார்பில் 40-ஆவது ஆண்டாக பழனி மலை திருப்படித் திருவிழா நடைபெற்றது.  படிப்பாதை தொடங்கும் இடத்தில் படிகளுக்கு விபூதி, சந்தனம்,  குங்குமம் வைக்கப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  
தொடர்ந்து காவடி, தீர்த்தக்குடங்கள் வைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு படி பூஜை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முனைவர் தேவி சண்முகம், வெங்கட்ரமணன், உமா நாட்டியப்பள்ளி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். படிபூஜையைத் தொடர்ந்து இன்னிசைக்குழு சகிதமாக அனைத்து படிகளுக்கும் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் படியேறினர்.  
மலைக்கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  மலைக்கோயில் போகர் சன்னிதியில் மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு  சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  இரவு தங்கத்தேர் புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com