Enable Javscript for better performance
இந்திய ஒற்றுமைக்கு பாஜக உலை வைக்க துணிந்துவிட்டது: வைகோ- Dinamani

சுடச்சுட

  

  இந்திய ஒற்றுமைக்கு பாஜக உலை வைக்க துணிந்துவிட்டது: வைகோ

  By DIN  |   Published on : 16th April 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய ஒற்றுமைக்கு பாஜக உலை வைக்க துணிந்துவிட்டது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
   திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவு திரட்டும் வகையில், மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட செயலர் என்.செல்வராகன் தலைமை வகித்தார்.
   இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: 
    பிரதமர் நரேந்திரமோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 42 வீரர்களின் தியாகத்தில் அரசியல் லாபம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவோம் என குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய ஒற்றுமைக்கு பாஜக உலை வைக்க துணிந்துவிட்டது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியா என்பதை ஐ.நா. மன்றத்தில் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தை பாஜக ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
             தமிழர்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு, மௌனித்து வருகிறது.  ஜனநாயகத்தின் காவலர்களான மக்கள், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு கிடைத்துள்ள வாக்கு உரிமை மூலம், மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிவதற்கு ஒரு சில நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றார்.
   கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, மதிமுக நகரச் செயலர் செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஒட்டன்சத்திரத்தில்
    திண்டுக்கல் மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள திடலில் வைகோ பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியது: தமிழக்தில் கருணாநிதி ஆட்சியில் 6 ஆயிரம் இந்து கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்தியாவில் பழ மொழிகள் பேசும் மக்களும், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பல மதத்தவரும் வாழ்கின்றனர்.  மதசார்பற்ற தன்மையை தகர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அது ஒரு போதும் நிறைவேறாது.
   விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் வருடம் ரூ.72 ஆயிரம் வழங்க ராகுல் காந்தி அறிவித்துள்ளார். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போது முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி எம்எல்ஏ, மதிமுக மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai