பழனியில் சித்திரைத் திருவிழா: பெருமாள் திருக்கல்யாணம்

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 
இக்கோயிலில் கடந்த வியாழக்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்  திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும்  இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. 
பெருமாள் தம்பதி சமேதராக அனுமார் வாகனம், சப்பரம், தங்கக்குதிரை வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினார். கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
புதன்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு இலக்குமி சமேத நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டர்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பட்டர்கள் நடனமாடியபடியே மாலைகள் மாற்றினர்.  திருக்கல்யாணத்தை முன்னிட்டு புஷ்பகைங்கர்ய சபா சார்பில் சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூஜைகளை திருவள்ளரை கோயில் கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில் கார்த்திக் அய்யங்கார், பாலாஜி அய்யங்கார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பழனி கோயில் மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், அரிமா சுப்புராஜ், புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி, மணியம் 
சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ரெணகாளியம்மன் கோயில்..  பழனி-புதுதாராபுரம் சாலையில் போலீஸ் லைன் அருகே உள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காணியாளர் செல்வராஜ் வீட்டில் இருந்து பொன் ஆபரணப்பெட்டி எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சக்திகரகம் அழைத்து வருதல் நடைபெற்றது.
 புதன்கிழமை காலையில் மாவிளக்கு செலுத்துதல், அக்கினிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தில் அம்பாளுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது.  இரவு ஏழு மணியளவில் தங்கரதத்தில் அருள்மிகு ரெணகாளியம்மன் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளினார்.  சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து வீதிஉலா நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com