கோடை வெப்பம்: குளிர்ந்த நீரில் குளிக்கும் கோயில் யானை
By DIN | Published On : 22nd April 2019 02:02 AM | Last Updated : 22nd April 2019 02:02 AM | அ+அ அ- |

கொளுத்தி வரும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பழனி கோயில் யானை கஸ்தூரி "ஷவரில்' திறந்து விடப்படும் குளிர்ந்த நீரில் ஆனந்த குளியல் போடுவதை பக்தர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
பழனி கோயில் யானை கஸ்தூரி. கோயில் யானைகள் முகாமில் தொடர்ந்து பலமுறை முதல் பரிசை வென்றுள்ள இந்த யானை பக்தர்களின் மனதையும் ஈர்த்துள்ளது. பழனிக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களின் போது தேரை பக்தர்கள் இழுக்க, தேரின் பின்னே இருந்து தள்ளும். மேலும் கந்தசஷ்டி விழாவின் போது சுமார் 600-க்கும் மேற்பட்ட படிகள் வழியே மலையில் ஏறி சுவாமி புறப்பாட்டின் போது பங்கேற்கிறது. இந்த நாள்களின் போது மடப்பள்ளியிலேயே யானைக்கும் சமையல் செய்து உணவு வழங்கப்படுகிறது.
கஸ்தூரி யானையை திருக்கோயில் நிர்வாகம் மிகவும் கவனமாக பராமரித்து வருகிறது. காரமடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கோயில் தென்னந்தோப்பில் பகல் நேரங்களில் யானை ஓய்வெடுக்கிறது.
அதே இடத்தில் யானை நீந்துவதற்காக நீச்சல்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள யானைக் கொட்டகையில் கட்டிவைக்கப்படுகிறது. இதன் அருகிலேயே யானை குளிப்பதற்காக "ஷவரும்' அமைக்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தும் நேரங்களில் இதில் திறந்து விடப்படும் நீரின் கீழே நின்று இந்த யானை ஆனந்தமாக குளியல் போடுகிறது. மேலும் தண்ணீரையும் துதிக்கையால் வாரி தன் மீது ஊற்றிக் கொள்கிறது.
கோயில் யானை கஸ்தூரி "ஷவரில்' குளிப்பதை பக்தர்கள் பலரும் வந்து பார்த்தும், மகிழ்ச்சியுடன் படம் பிடித்தும் செல்கின்றனர்.