திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் "டெபாசிட்' பெற 1.92 லட்சம் வாக்குகள் தேவை!
By DIN | Published On : 22nd April 2019 02:04 AM | Last Updated : 22nd April 2019 02:04 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வைப்புத் தொகையை (டெபாசிட்) பெறுவதற்கு 1.92 லட்சம் வாக்குகளுக்கும் கூடுதலாக பெற வேண்டிய நிலை உள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த 15.40 லட்சம் வாக்காளர்களில், 11.55 லட்சம் வாக்காளர்கள் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
மொத்த வாக்குகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 7.53 லட்சம் ஆண் வாக்காளர்களில் 75.39 சதவீதம் பேரும், 7.86 லட்சம் பெண் வாக்காளர்களில் 74.64 சதவீதம் பேரும், 158 மூன்றாம் பாலினத்தவர்களில் 10.76 சதவீதம் பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர். ஒரு தொகுதியில் பதிவான செல்லத் தகுந்த(வேலிட்) வாக்குகளில் 6ல் 1 பங்கு வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள், வைப்புத் தொகையை திரும்ப பெற
முடியும்.
அந்த வகையில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான 75 சதவீத வாக்குகளில், 1.92 லட்சம் வாக்குகளுக்கும் கூடுதலாக பெறும் வேட்பாளர்கள் மட்டுமே வைப்புத் தொகையை பெற முடியும்.
நிலக்கோட்டைக்கு 30 ஆயிரம் வாக்குகள் தேவை: இடைத் தேர்தல் நடைபெற்ற நிலக்கோட்டை(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியைச் சேர்ந்த 2.29 லட்சம் வாக்காளர்களில் 78.79 சதவீதம் பேர், வாக்குப் பதிவு செய்துள்ளனர்.
1.13 லட்சம் ஆண் வாக்காளர்களில் 78.49 சதவீதம் பேரும், 1.16 லட்சம் பெண் வாக்காளர்களில் 79.74 சதவீதம் பேரும், 4 மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருவரும்(25 சதவீதம்) வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 2.29 லட்சம் வாக்குகளில் 1.80 லட்சம் வாக்குகள் பதிவாகின.
நிலக்கோட்டை(தனி) சட்டப்பேரவைத் தொகுதியை பொருத்தவரை, போட்டியிட்ட வேட்பாளர்கள் 30ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெற்றால் மட்டுமே வைப்புத் தொகையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.