பொன்பரப்பி, பொன்னமராவதி மோதல் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது: விஹெச்பி மாநிலச் செயலர்
By DIN | Published On : 23rd April 2019 07:02 AM | Last Updated : 23rd April 2019 07:02 AM | அ+அ அ- |

பொன்பரப்பி, பொன்னமராவதி சாதி மோதல் சம்பவங்கள் மோதல் சம்பவங்கள் வருத்தமளிப்பதாக உள்ளன என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சாதி மோதல் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் என்றைக்கும் இல்லாத விதமாக, சாதிகளை கடந்தும், மறந்தும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்து வாக்கு வங்கி உருவாகியுள்ளது, சில அரசியல் கட்சிகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகளால் இந்த சாதி மோதல்கள் உருவாக்கப்படுகிறதோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வழக்குரைஞர், மருத்துவர் போன்றோர் அடங்கிய தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சாதி மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மோதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகளை எடுத்துக் கூறி மோதல் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் வழிவகை செய்வர். இந்து மக்களிடம் வலைதளம் மூலமாகவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமை சில கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.