"அரசு அலுவலர்கள் மொழிப் பற்றுடன் இருந்தால் ஆட்சி மொழி செயலாக்கம் எளிது'

அரசு அலுவலர்கள் மொழிப் பற்றோடு பணியாற்றினால், ஆட்சி மொழி செயலாக்கத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும்

அரசு அலுவலர்கள் மொழிப் பற்றோடு பணியாற்றினால், ஆட்சி மொழி செயலாக்கத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குநர் பெ. சந்திரா அறிவுறுத்தினார். 
        திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குநர் பெ. சந்திரா தொடக்க உரையாற்றியதாவது:
       மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் செய்தியையும், அரசு மக்களிடம் எதிர்பார்க்கும் தகவலையும் பகிர்வதற்கு பயன்படுத்தப்படும் மொழியே ஆட்சி மொழி. வேற்று மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தபோதிலும், ஆட்சி மொழி தமிழாக மட்டுமே இருந்தது.
      மொழி அழிக்கப்பட்டால், அந்த மொழி சார்ந்த மக்களின் கலாசாரமும், பண்பாடும் அழிந்துவிடும். திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் வேர் தமிழ் மொழியில் உள்ளது.
 ஒரு மொழிக்கு இலக்கணமும், இலக்கியமும் இருந்தால் மட்டும் போதாது. அந்த மொழி பேச்சு வழக்கில் இருப்பதும் அவசியம். தமிழ் மொழியின் வேரை (தொடக்கம்) எவராலும் கண்டறிய முடியாது. அந்த வேரினை கண்டறியும் வரை தமிழை யாராலும் அழிக்கவும் முடியாது. 
      மொழியின் முக்கியத்துவம் குறித்து நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாததாலும், அலட்சியத்தாலும், தாய் மொழியில் கையொப்பமிட வேண்டும் என்ற அரசாணையை கூட இன்று வரை அறிவுறுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதனை உணர்ந்து, ஆட்சி மொழி செயலாக்கத்தை அமல்படுத்தும் வகையில், அரசு அலுவலர்கள் தாய்மொழி பற்றோடு பணியாற்ற வேண்டும் என்றார். 
     நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ, முன்னாள் உதவி இயக்குநர் பா. ஆறுமுகம், தமிழறிஞர் தமிழ் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆங்கிலத்தில் கையொப்பம்
 பயிலரங்கக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். அலுவலர்களின் வருகைப் பதிவுக்காக, ஒவ்வொருவரிடமும் பெயர், அலுவலக விவரங்களுடன் கையொப்பம் பெறப்பட்டது. அதில், சிலர் ஆங்கில முதல் எழுத்துடன் கையொப்பமிட்டனர். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் அறிவுறுத்திய பின், தமிழில் கையொப்பமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com