பழனி அருகே மாயமான அரசுப் பேருந்து ஆற்றுப் பாலத்தின் கீழிருந்து மீட்பு

பழனி அருகே அரசுப் பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள், அதை சேதப்படுத்தி சண்முக நதி பள்ளத்தில் விட்டுச் சென்றுள்ளனர். 

பழனி அருகே அரசுப் பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள், அதை சேதப்படுத்தி சண்முக நதி பள்ளத்தில் விட்டுச் சென்றுள்ளனர். 
      பழனியை அடுத்துள்ள கீரனூர் பகுதியானது, பழனி மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையான தாராபுரத்தில் இருப்பதால், இரு மாவட்டங்களுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 இதில், பழனி பேருந்துகள் அனைத்தும் இரவில்  அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தப்படும். அதேநேரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பணிமனைக்கு உள்பட்ட ஒரு அரசுப் பேருந்து மட்டும் இரவில் கீரனூரிலேயே நிறுத்தப்பட்டு, தினமும் அதிகாலை அங்கிருந்து இயக்கப்படுகிறது.
     இந்தப் பேருந்து, அங்குள்ள தனியார் மடத்தின் முன்பாக நிறுத்திவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்குவது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஓட்டுநர் சிவக்குமார், நடத்துனர் அமுதன் ஆகியோர் பேருந்தை மடத்தின் முன்பாக நிறுத்திவிட்டு, அங்கேயே தங்கிவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது, பேருந்தை காணவில்லையாம். அதையடுத்து, பேருந்தை தேடிச் சென்றுள்ளனர். அப்போது, கீரனூரை அடுத்த சண்முக நதி பாலம் கீழே பள்ளத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. 
    மேலும், பேருந்தின் சக்கரங்கள், முன்பகுதி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்திருந்தன. 
     இது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் ஓட்டுநர் அமுதன் புகார் செய்தார்.  அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள ரகசிய கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    பின்னர், பள்ளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை கிரேன் மூலம் தூக்கி, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com