முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 04th August 2019 03:54 AM | Last Updated : 04th August 2019 03:54 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்று காரணமாக வெள்ளிநீர்வீழ்ச்சியருகே மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததில் வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மாலை தொடங்கி இரவு முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஏரிச்சாலைப் பகுதியில் கடைகளில் உள்ள விளம்பர பதாகைகள் சரிந்து விழுந்தன. சாலை முழுவதும் சிறு, சிறு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந் நிலையில் கொடைக்கானல்- வலகுண்டு சாலையில் வெள்ளிநீர் வீழ்ச்சியருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அப் பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தப்பின. இதையடுத்து அப் பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பான தொலைவில் நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய பணியாளர்கள் மின்விநியோகத்தை உடனடியாக நிறுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றினர். அதன் பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.