முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி பெரியாவுடையார் கோயிலில் அஸ்த்ர தேவர் பூஜை
By DIN | Published On : 04th August 2019 03:53 AM | Last Updated : 04th August 2019 03:53 AM | அ+அ அ- |

பழனி பெரியாவுடையார் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை அஸ்த்ரதேவர், கன்னிமார் பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் சன்னிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விஞ்ச் நிலையம், கட்டணதரிசன வழிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழனி சண்முகநதிக்கரையில் ஏராளமான பெண்கள் குடும்பத்தோடு வந்திருந்து மாங்கல்யம் மாற்றி பூஜைகள் செய்தனர்.
பழனி பெரியாவுடையார் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை அஸ்த்ரதேவர் பூஜை நடைபெற்றது. பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து விநாயகர், அஸ்த்ரதேவர், சண்டிகேசுவரர், ஆனந்தவள்ளி சமேதர் சந்திரசேகரர் ஆகியோர் காலையில் புறப்பாடு செய்து உச்சிக்காலத்தின் போது பெரியாவுடையார் கோயிலை அடைந்தனர். உச்சிகால பூஜையில் மஹாதீபாராதனையை தொடர்ந்து அஸ்த்ரதேவர் சண்முகநதிக்கரைக்கு எழுந்தருளினார்.
அங்கு ஆற்று மணலில் கன்னிமார் பிடிக்கப்பட்டு வேதமந்திரம் ஓத, மேளதாளம் முழங்க அஸ்த்ரதேவர் பூஜை நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் செய்தனர்.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், டிஎஸ்பி., விவேகானந்தன், கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.