சோத்துப்பாறை அணையில் குறைந்து வரும் நீர்மட்டத்தால் குடிநீருக்கு அபாயம்!

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், பெரியகுளம்

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், பெரியகுளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலையும் உருவாகியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. 126.28 அடி உயரமுள்ள இந்த அணை, 100.22 மி.கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. பெரியகுளம் அருகே அகமலை, பெரியூர், சின்னூர், கன்னக்கரை பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, இந்த அணைக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம், பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் லட்சுமிபுரம்  பகுதிகளிலுள்ள பழைய நன்செய் பாசனப் பகுதிகளான 1,825 ஏக்கரும், புதிய புன்செய் பாசனப் பகுதிகளான 1,040 ஏக்கரும் என மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
அத்துடன், பெரியகுளம், தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி மற்றும் எ.புதுப்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கஜா புயலின்போது, சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளளவை எட்டியது. ஆனால், தற்போது அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 74.62 அடியாக இருந்தது. அணையிலிருந்து பெரியகுளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 3 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுத்திகரிப்பு செய்து விநியோகிப்பதற்காக குழாய்தொட்டி எனும் இடத்துக்கு கொண்டுவரப்படும் தண்ணீரை, ஆங்காங்கே மறித்து திருடப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் குடிநீருக்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், கடந்த 5 மாதங்களாக முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால், பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இது குறித்து நகராட்சிப் பணியாளர்கள் தெரிவித்தது: சோத்துப்பாறை அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால், பெரியகுளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் பகிரந்து விநியோகிக்கப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com