மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகங்கள்: 4 நிலை உயர்வு, 5 நிலை இறக்கம்

தமிழகத்தில் 5 மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகங்களை நிலை இறக்கம் செய்தும், 4 மாவட்டங்களை

தமிழகத்தில் 5 மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகங்களை நிலை இறக்கம் செய்தும், 4 மாவட்டங்களை நிலை உயர்த்தியும், 35 வழிகாட்டு ஆலோசகர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்வது எனவும், பல்வேறு சீரமைப்பு  நடவடிக்கைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
        தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த வேலைவாய்ப்புத் துறை, கடந்த 2017ஆம் ஆண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
      கல்விச் சான்றிதழ்களை பதிவு செய்வதே வேலைவாய்ப்புத் துறையின் பிரதான பணியாக இருந்து வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் சான்றிதழ் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி இணைய வழியில் மேற்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் என இதர பணிகள் மீது வேலைவாய்ப்பு அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 
    அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், சரியான வழிகாட்டுதலை வழங்கும் அளவுக்கு கல்வித் தகுதியும், அனுபவமும் அலுவலர்களுக்கு இல்லை. தமிழக இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கும் வகையில், வேலைவாய்ப்புத் துறை அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.  வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அளிப்பதற்கு (கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்), உளவியல்  துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது வழிகாட்டுதலுக்கு முதுநிலை அல்லது  பட்டயப் படிப்பு முடித்தவர்களால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் என, கடந்த நவம்பவர் மாதம் தினமணியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, வேலைவாய்ப்புத் துறையில் புதிய மாற்றங்கள் நிகழத் தொடங்கின.
       மாதந்தோறும் நடைபெற்று வந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், தற்போது வெள்ளிக்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசு கல்லூரிகளிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
உயர்வும் - இறக்கமும் 
      இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பெயரை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் என மாற்றியும், வேலைவாய்ப்புத் துறை ஆணையரகம் முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வரையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், உதவி இயக்குநர் அலுவலகமாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 
     அதே நேரத்தில், துணை இயக்குநர் நிலையில் இருந்த தஞ்சாவூர் அலுவலகம் உதவி இயக்குநர் அலுவலகமாகவும், உதவி இயக்குநர் நிலையிலிருந்த கடலூர், நாகர்கோவில், ராமநாதபுரம், தருமபுரி அலுவலகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நிலைக்கும் தரம் இறக்கப்பட்டுள்ளன. 
     இதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பெயரை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஆணையரகத்தில் 6 நிலைகளிலுள்ள பணியிடங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. 
      இது தொடர்பாக வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மொத்தமுள்ள 226 உதவியாளர் பணியிடங்களில், 32 பணியிடங்கள் தொழில்நெறி வழிகாட்டும் உதவியாளர் பணியிடமாக மாற்றப்பட உள்ளது. மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள், தொழில்நெறி வழிகாட்டுதல், திறன் பயிற்சி வழங்குதல், வேலை நாடுனர் மற்றும் தொழில்துறையினரிடையே சந்திப்பை ஏற்படுத்துதல், அரசு துறைகளிலுள்ள வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
     மேலும், 78 மேம்படுத்தப்பட்ட உதவியாளர் பணியிடங்களில், 35 பணியிடங்கள் வழிகாட்டு ஆலோசகர்கள் நிலைக்கு மாற்றப்பட உள்ளன. இந்த பொறுப்பில், சமூகப் பணிகள் மற்றும் உளவியல் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களோ, ஆலோசனைத் துறை பட்டயம் பெற்றவர்களோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். 
     அதேநேரம், 12 மேம்படுத்தப்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு எழுத்தராக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம், கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கும், வேலைவாய்ப்புள்ள துறைகளில் இளைஞர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com