திண்டுக்கல்லில் தமிழ் மன்றப் போட்டிகள்
By DIN | Published On : 09th August 2019 07:38 AM | Last Updated : 09th August 2019 07:38 AM | அ+அ அ- |

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் மன்றப் போட்டிகளில், 9 இல் 6 பரிசுகளை மாணவிகள் கைப்பற்றினர்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெல்லட்டும் தமிழ் என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், இனியொரு விதி செய்வோம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 30 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.
கவிதைப் போட்டியில் ச.மோகனபிரியதர்சினி(மு.ரெ.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கன்னிவாடி) முதல் பரிசும், ந.சீனிவாசன் (புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்) 2ஆம் பரிசும், ர.சந்தோஷ் குமார்(துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, நத்தம்) 3ஆம் பரிசும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் தா.காருணியா(அண்ணாமலையார் ஆலை பெண்கள் அரசு உதவிப் பெறும் பள்ளி) முதலிடமும், தி.ஹர்ஷவர்தினி (நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி, இடையக்கோட்டை) 2ஆம் இடமும், ம.சுஜா(சேரன் மெட்ரிக் பள்ளி, சின்னாளப்பட்டி) 3 ஆவது இடமும் பிடித்தனர்.
பேச்சுப் போட்டியில் ஜா.கவின்வாரா(ஆர்.சி மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி) முதலிடமும், உ.நவிஸ்பாத்திமா(புனித லூர்து அன்னை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி) 2ஆம் இடமும், ச.சரண்யா(அண்ணாமலையார் ஆலை பெண்கள் அரசு உதவிப் பெறும் பள்ளி) 3 ஆம் இடமும் பிடித்தனர்.
முதல் பரிசுக்கு ரூ.10ஆயிரம், 2 ஆம் பரிசுக்கு ரூ.7ஆயிரம், 3 ஆம் பரிசுக்கு ரூ.5ஆயிரம் வீதம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி பரிசுத் தொகையினை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்கக கண்காணிப்பாளர்(சென்னை) ஜோதிலட்சுமி, முன்னாள் துணை இயக்குநர் பெ.சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.