ஒட்டன்சத்திரம் பகுதி குடிநீர் பிரச்னைக்கு  தீர்வு காண கோரி ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள குடிநீர் பிரச்னைகளுக்கு துரிதமாக தீர்வு காணக் கோரி மாவட்ட ஆட்சியரை

ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள குடிநீர் பிரச்னைகளுக்கு துரிதமாக தீர்வு காணக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி  செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார், எம்.ஏ.ஆண்டி அம்பலம், எம்பி வேலுச்சாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து  மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். ஆட்சியரை சந்தித்த பின், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது: 
கொத்தயம் நல்லதங்காள் அணைக்கட்டு திட்டத்துக்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 300 மீட்டர் கரை அமைக்க வேண்டிய பணி மட்டுமே எஞ்சியுள்ளது. 
இதனை மழை காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 50 கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். 
ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும். வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2008-ஆம் ஆண்டு அரசப்பபிள்ளைபட்டி முதல் சத்திரப்பட்டி வரை ஏற்கெனவே போடப்பட்ட குடிநீர் குழாய்கள் மிகவும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், அதனை  சீரமைக்க  ரூ.40  லட்சம் நிதியை கனிமவள நிதியிலிருந்தோ, மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்தோ ஒதுக்க வேண்டும்.  ஒட்டன்சத்திரம் பகுதியில் கண் வலிக் கிழங்கு (செங்காந்தள் மலர்) சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக போதிய விலை கிடைக்கவில்லை. 
எனவே அரசு வேளாண் விற்பனைத் துறையின் மூலமாக நேரடியாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தால் விவசாயிகள் பயன் பெற வாய்ப்பு ஏற்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com