நாடாளுமன்ற நடைமுறைகளை மீறி மசோதாக்கள் நிறைவேற்றம்

பாஜக அரசு, நாடாளுமன்ற நடைமுறையை மீறி மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது என  சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

பாஜக அரசு, நாடாளுமன்ற நடைமுறையை மீறி மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது என  சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 
  திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர்  கூறியது: அரசு கொண்டு வரும் மசோதாக்கள், நாடாளுமன்ற குழு மூலம் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் கொண்டு வந்து, அதன் பின் வாக்கெடுப்புக்கு வருவது வழக்கம். ஆனால், பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக அரசு, நாடாளுமன்ற குழு அமைக்காமலும், நடைமுறைகளை பின்பற்றாமலும் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின்  கருத்துக்களுக்கு  மதிப்பில்லை என்பது மட்டுமின்றி, விவாதம் செய்வதற்கான சூழலே இல்லை. மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும், தனி நபர் உரிமைகளையும் மத்திய அரசு பறித்துவிட்டது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் பிரச்னையில், 2 முன்னாள் முதல்வர்கள் மட்டுமின்றி 500 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  அரசியல் சாசன 370 ஆவது பிரிவால் காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து துறைகளிலும், பாஜக ஆளும் மாநிலங்களைவிட காஷ்மீர் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். 
 காஷ்மீரின் சரித்திரத்தை புரிந்து கொள்ளாமல் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுள்ளார். புராணத்தை மட்டுமே வாசித்துள்ள ரஜினிகாந்த், சரித்திரத்தையும் வாசிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னைப் போல், தமிழகம் சார்ந்த காவிரி,  முல்லைப் பெரியாறு, ஈழம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் கருத்து சொல்ல வேண்டும். சோனியா காந்தி மீண்டும்  தலைமை பொறுப்புக்கு வந்துள்ளதன் மூலம் காங்கிரஸ் புத்துணர்வு பெறும் .
 இந்தியாவின் அரசியல் சாசனத்தை மாற்றி அதிபர் முறை ஆட்சிக்கு மத்திய அரசு முயற்சிக்கலாம். இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு அது பேராபத்தாக  முடியும். மும்மொழி கொள்கை என்பதே, இந்தி திணிப்புக்கான முயற்சி தான்.
 ஆசியாவிலேயே சிறந்த நிதி அமைச்சராகவும், 9 முறை மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வருமான ப.சிதம்பரம் குறித்து, தமிழக முதல்வரின் கருத்து மிகவும் வருந்தத்தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com