சுடச்சுட

  

  நிலக்கோட்டை காய்கறி சந்தையில் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு

  By DIN  |   Published on : 15th August 2019 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிசந்தைகளில் இருந்து வரும் காய்கறி மூட்டைகளுக்கு வரி வசூலிப்பதை எதிர்த்து நிலக்கோட்டை தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்பு செய்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் வரிவசூல் செய்வதற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. நிலக்கோட்டை சேர்ந்த ஒருவர் ரூ. 22 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். தொடர்ந்து அவர் சந்தையில் கடந்த ஒரு மாதமாக வரி வசூல் செய்து வருகிறார். 
  வெளி சந்தைகளில் இருந்து வரும் காய்கறி மூட்டைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என காய்கறி வியாபாரிகளிடம் அவர் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த வியாபாரிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக நிலக்கோட்டை வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 
  இந்நிலையில் புதன்கிழமை காலை வெளி சந்தையில் இருந்து வந்த வாகனங்களில் இருந்த மூட்டைகளுக்கு கூடுதல் வரி செலுத்துமாறு கேட்டு மூட்டைகளை இறக்கவிடாமல் குத்தகைதாரர் தடுத்ததாக கூறப்படுகிறது. 
  இதனால் ஆத்திரமடைந்த காய்கறி வியாபாரிகள் உடனடியாக கடையடைப்பு மற்றும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  இதை அறிந்த நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமார் மற்றும் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி காய்கறி வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டுமென டிஎஸ்பி வேண்டுகோள் விடுகோள் விடுத்தார். இதனை ஏற்று காய்கறி வியாபாரிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai