பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத கிராமங்கள்: கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானிக்க அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத கிராமங்களை கண்டறிந்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 
 பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் மூலம் விசாரித்தல், காவல்துறை மூலம் தேடுதல், பல்துறை ஒருங்கிணைப்பு மூலம் தெருவோர சிறுவர்களை கண்டறிதல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் கண்டறிதல் போன்ற உத்திகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து விவாதித்து, அந்த குழந்தைகள் பயில்வதற்கு சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். 
 பள்ளிக்குரிய குடியிருப்பு பகுதியில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த கல்வித் திட்ட களப் பணியாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசியர்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, இதனை விவாதப் பொருளாக சேர்க்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத கிராமம் எனில், அதனை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்ற வேண்டும். இந்த செயல்பாடுகள் குறித்த விவரங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com