போக்குவரத்து ஊழியர் அகவிலைப்படி விவகாரம்: செப். 24 இல் தலைமைச் செயலகம் முற்றுகை

அகவிலைப்படி உயர்வு வழங்குவதிலுள்ள பாரபட்சத்தை நீக்கக் கோரி செப்டம்பர் 24 ஆம் தேதி தலைமைச்

அகவிலைப்படி உயர்வு வழங்குவதிலுள்ள பாரபட்சத்தை நீக்கக் கோரி செப்டம்பர் 24 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இந்த அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 5 ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் நாள் மாநாட்டிற்கு எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன தலைவர் ஏ.சௌந்தராஜன், பொதுச் செயலர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஊழியர்கள் 80 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் 125 சதவீத அகவிலைப்படி இணைத்து 2.44 மடங்கு உயர்வுடன் பணியில் இருப்பவர்களுக்கும், 2018 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி ஓய்வுப் பெற்ற பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் 2018 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின் ஓய்வுப் பெற்றவர்களுக்கு 2.44 மடங்கு உயர்வு அடிப்படையில் 5 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு ஓய்வுப் பெற்றவர்களுக்கு 11 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற 2 விதமான நடைமுறையினை பின்பற்றுவதை கைவிட வேண்டும். தமிழக அரசின் கீழ் பணியாற்ற ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு, தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அகவிலைப்படியே வழங்கப்பட்டு வருகிறது. இதே முறையை போக்குவரத்துக் கழக ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கும் தமிழக அரசு கடைப் பிடிக்க வேண்டும்.  போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 2015 நவம்பர் மாதத்திற்கு பின் அகவிலைப்படி மாற்றம் செய்யப்படவில்லை. சுமார் 45 மாதங்களாக ஓய்வூதியம் என்பது தொகுப்பூதியம் போல் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை நீக்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், செப்டம்பர் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
 மாநாட்டில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் மாநில தலைவராக எஸ்.கிருஷ்ணன், பொதுச் செயலராக கர்சன், பொருளாளராக வரதராஜன் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com