திண்டுக்கல் மாவட்டத்தில் 73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 
திண்டுக்கல்:  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 73ஆவது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, காவல் துறை, ஊர்க் காவல் படை, தேசிய மாணவர்  படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆட்சியர், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 25 பேருக்கும், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 109 பேருக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  
விழாவில், வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 62 பயனாளிகளுக்கு ரூ.92.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியின்போது, மாவட்டத்தில் சிறந்த முறையில் மழைநீர் சேகரிப்பு கலன்களை உருவாக்கிய கட்டட உரிமையாளர்கள் 50 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளி, புனித வளனார்  மகளிர் மேல்நிலைப் பள்ளி, எஸ்எம்பி மேல்நிலைப் பள்ளி,  அச்யுதா மேல்நிலைப் பள்ளி, ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, செளந்தரராஜா வித்யாலயா ஆகிய பள்ளிகளைச்  சேர்ந்த  500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணைவேந்தர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், போராசியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின  விழாவில், கல்லூரி முதல்வர் செ. லதா பூரணம், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
 மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தில் உள்ள ஸ்ரீவாசவி பள்ளியில், தாளாளர் என். ஸ்ரீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தாடிக்கொம்பு சாலையில் உள்ள வர்த்தக சங்க வளாகத்தில், சங்கத்தின் தலைவர் சி. குப்புசாமி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாகல் நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு, செயலர் ஹெச். கண்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் பி. நம்பிக்கைநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
வ.உ.சி. சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, அறக்கட்டளையின் தலைவர் ஆர்.எஸ். சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் வி.மருதராஜ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 
குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தலைமையாசிரியர் பி. மனோகரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
வேடசந்தூரிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் க. மணிவண்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையார்நத்தம் பகுதியிலுள்ள ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் மேல்நிலைப் பள்ளியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  அ. செல்வராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பேகம் சாஹீபா நகரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம்பிராஜன் தேசியக் கொடியேற்றினார். அசனத்புரம் தொடக்கப் பள்ளியில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சின்னத்தம்பி தேசியக் கொடியை ஏற்றினார். 
தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, காந்தி மன்ற இயக்கத்தின் தலைவர் பொ. மருது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரானகாங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் முன்னாள் தலைவர் ஏ. அப்துல்ஜபார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், அதன் மருத்துவ சேவை அணியின் செயலர் எஸ். காதர் ஷெரீப் தலைமையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 
நத்தம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நீதிபதி கலையரசி ரீனா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராஜமுரளி, பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் சரவணகுமார், மின்வாரிய அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன், தீயணைப்பு நிலையத்தில் அலுவலர் திருக்கோள்நாதர், அரசு மருத்துவமனையில் டாக்டர் கெளசல்யா, நத்தம் வனத் துறை அலுவலகத்தில் வனச்சரகர் ஜெயசீலன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
பழனி: பழனி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில்,  இணை ஆணையர் செல்வராஜ் தேசியக் கொடியேற்றினார். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் முதல்வர் பிரபாகரன் தேசியக் கொடியேற்றி, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சின்னக்கலையமுத்தூர் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வர் புவனேஸ்வரி தேசியக் கொடியேற்றி தலைமை உரையாற்றினார். பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார்-ஆட்சியர் உமா தேசியக் கொடியேற்றினார். பழனி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் நாராயணன் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். 
பழனி அடிவாரம் திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில்,  வட்டாட்சியர் மங்களபாண்டியன் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். பழனி அடிவாரம் முத்தமிழ் பயிலகத்தில், பயிலக முதல்வர் ஜெகதீஸ்வரன் தேசியக் கொடியேற்றினார். பழைய ஆயக்குடி வ.உ.சி. மழலையர் மெட்ரிக். பள்ளியில் தாளாளர் முத்து தேசியக் கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பழனி பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.      பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பில், மாநில ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளர் காஜாமைதீன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அ. பெத்தாலெட்சுமி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சின்னாளப்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, நடூர் பி. கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட காமராஜர் தேசிய பேரவைத் தலைவர் ராமு. ராமசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், செயல் அலுவலர் கலையரசி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்றனர். 
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். வத்தலகுண்டு  பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலையில், தலைவர் ரத்தினம் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். வத்தலகுண்டு கூட்டுறவு நகர வங்கியில், தலைவர் கணேசன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். 
வத்தலகுண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், வத்தலகுண்டு வெற்றிலை நகர் அரிமா சங்கமும் இணைந்து கொண்டாடிய விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். வத்தலகுண்டு  திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், வத்தலகுண்டு ஈடன் கார்டன் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவர் பொன். அண்ணாதுரை தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். 
வத்தலகுண்டு அருகே சின்னுபட்டி  செல்வராஜன் நினைவு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், அதன் செயலர் சவுரிராஜ் தேசியக் கொடியேற்றினார். வத்தலகுண்டு அருகே ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சுதந்திர தின விழா, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு ஆசிரியர்  சத்யபாமா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார்.
ஒட்டன்சத்திரம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் என்.கே. சரவணன் தேசியக் கொடியேற்றினார். ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பா. தேவிகா தேசியக் கொடியேற்றினார். ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசன் தேசியக் கொடியேற்றினார்.
காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கே. ரெங்கசாமி தேசியக் கொடியேற்றினார். கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில், ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவக் கழகச் செயலர் மருத்துவர் ஏ. ஆசைத்தம்பி தேசியக் கொடியேற்றினார். ஒட்டன்சத்திரம் எவர்கீரின் சிட்டி கிளப் சார்பில், தலைவர் கே. குழந்தைவேல் தேசியக் கொடியேற்றினார்.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் காளாஞ்சிபட்டி தொடக்கப் பள்ளியில், ஒட்டன்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் சகாய செல்வி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com