புதிய மோட்டார் வாகனச் சட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் மட்டுமின்றி,

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் மட்டுமின்றி, வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றுக்கான கட்டணமும் பன் மடங்கு உயரும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்தவே இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் போக்குவரத்து வீதிமீறல்களுக்கான அபராதத் தொகை  அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணம், தகுதிச் சான்றுக்கான கட்டணம் என பல்வேறு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அனைத்து வாகன உரிமையாளர்களும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. 
இச்சட்டம் குறித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் டி.முருகேசன் கூறியது: தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக, இச் சட்ட மசோதாவை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 
தற்போது நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள தனிப் பெரும்பான்மையால் 63 திருத்தங்களோடு இச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி அமல்படுத்துகிறது. இதனால், பொது போக்குவரத்துக்கான கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. 
மேலும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, வாகனங்களுக்கான தகுதிச் சான்று உள்பட தற்போது வட்டார போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளும், தனியார் வசம் (4 வழிச் சாலைக்கான சுங்க கட்டணம் வசூல் போல்) ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
தற்போது நடைமுறையிலுள்ள பி.எஸ்.4 ரக (வகை) வாகனங்களுக்கு மாற்றாக 2020 முதல் பி.எஸ்.6 ரக வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதனால், தற்போது பயன்பாட்டிலுள்ள வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காத சூழல் ஏற்படும். மின்சாரத்தில் இயங்க கூடிய பேருந்துகளை வாங்கி யார் வேண்டுமானாலும், எந்த வழித்தடத்திலும், எந்நேரத்திலும் கட்டுப்பாடின்றி இயக்கலாம் என்ற சூழலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வீழ்ச்சி அடையும். அதேபோல் விபத்து காப்பீடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான முடிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். 
திண்டுக்கல் மாவட்ட சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் ஏ.தனசாமி கூறியது: 
இந்த புதிய சட்டத் திருத்தத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பாதுகாப்பான சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளி, உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்குதல் பணிகளும் எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் வசம் சென்றுவிடக் கூடிய போராபத்து உள்ளது. வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை விபத்து ஏற்படும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. 
எதிர் வரும் காலங்களில், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களை தனி நபர் இயக்க முடியாத நிலை ஏற்படும். இந்த தொழில் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை நிர்ணயிக்கும் கட்டணத் தொகையிலே பொதுமக்கள் பயணிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும். 
இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியது: 
போக்குவரத்து விதிமீறல்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டணம் குறித்து மின்னஞ்சல் மூலம், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தகவல் வந்துள்ளது. அதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com